Monday, February 18, 2008

கணினி விலை கடுமையாக உயரும்

கணினி கலால் வரியை மத்திய அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாற்றியமைத்துள்ளதால், விலை கடுமையாக உயரும் என்று, அதன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று கணினி என்பது தவிர்க்க முடியாத சாதனம். சாதாரணமாக அலுவலகப் பயன்பாட்டுக்கும், மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தும் சாதனம் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணினியின் விற்பனை 48 சதமாக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் தற்போது ஒரு மாதத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கணினிகள் அதன் திறனுக்கு ஏற்றார்போல் சந்தையில் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலான கணினி ரகங்களையே மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

தற்போது கணினி விற்பனையில் 25 நிறுவனங்கள் உள்ளன. நமது நாட்டில் கணினி உதிரி பாகங்கள் சீனா, தைவான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, இங்கு அவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழு உருவம் அடைகிறது.

ஒரு கணினி, நிறுவனத்தில் இருந்து சந்தைக்கு செல்லும் போது, அதன் அடக்கவிலையில் மத்திய அரசு 16 சதம் கலால் வரியாக வசூலித்தது.

ஆனால், இதை கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றியமைத்துள்ளது. அதாவது இதுவரை அடக்கவிலையில் கலால் வரி வசூலிக்கப்பட்ட நிலை மாறி, இனி அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(ஙதட)16 சதம் கலால் வரி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் கணினியின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு அதன் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம் அரசு மறைமுகமாக கணினிகளின் விலையை ஏற்றியுள்ளது. இதனால் கணினிகளின் விலை 4 சதம் முதல் 7 சதம் உயர வாய்ப்புள்ளதாக அதன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விலையில் "வாட்' வரி விதிக்கப்படும்போது, மேலும் கணினி விலை உயரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தற்போது ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் கணினிகள், இனி ரூ. 14,000 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு கணினி சார்ந்த பொருள்களான பிரிண்டர், யுபிஎஸ், ஸ்கேனர் போன்ற பொருள்களுக்கும் பொருந்தும்.

நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னரே, அரசு மறைமுகமாக கணினிகளின் விலையை உயர்த்தி இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களும், நடுத்தர மக்களுமே ஆவார்கள்.

இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமை (பிப்.18) முதல் அமலுக்கு வரும் என்று கணினி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த விலை உயர்வால், கணினியின் விற்பனையும் வீழ்ச்சி அடைய நேரிடலாம் என அகில இந்திய கணினி விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.வி. சங்கர் தெரிவிக்கிறார்.

மத்திய தகவல் தொடர்புத் துறை 2010-ம் ஆண்டுக்குள் வீடுகளுக்கு பயன்படும் கணினிகளை 75 மில்லியன் விற்பனை செய்வது என இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந் நிலையில் கணினி விலை உயர்ந்தால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியிருக்கிறது.

எனவே விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மீண்டும் அடக்கவிலையிலேயே கலால் வரி வசூல் செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.