"நான் வேலை செய்து கொடுத்து என் திறமையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு வாய்ப்பளிக்க நிறுவனங்கள் முன் வரவில்லையே" என்று நண்பர்கள் புலம்புகிறார்களா?...
"பொழுதுபோக்காக நான் ஈடுபட்டிருந்த தொழிலில் என் திறமை குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டிருக்கிறது. அதை நிறுவனங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன்," என்று கூறுபவர்கள் உங்களுடன் இருக்கிறார்களா?
"பகுதிநேரத்தில் இணையம் வழியாக வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பும் எனக்கு, எதாவது வாய்ப்பு இருக்கிறதா?" என்று உங்களிடம் ஆலோசனைக் கேட்கிறார்களா...
இதோ அவர்களுக்கான விடை... உங்கள் உலாவியின் முகவரி கட்டத்தில் www.guru.com என தட்டெழுத்துச் செய்தால் இந்த இணையதளம் உங்களுக்கு கிடைக்கும்.
தட்டச்சு மட்டும் செய்யத் தெரிந்தவராக இருந்தாலும் சரி, தகவல் தொழில்நுட்பத்தில் மென்பொருள் வல்லுனராக விளங்கினாலும் சரி, பல பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கு இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தகவல் தொழில்நுட்ப பணிகள், இணையதளங்கள், வடிவமைப்பு எழுத்துப்பணிகள், பதிப்பகப் பணிகள், புகைப்படம், சிற்பக்கலை உள்ளிட்ட துறை சார்ந்த பணிகள், செயலாளர்களுக்கான பணி என ஏராளமான வேலைவாய்ப்புகள் இத்தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன.
தற்காலிக பணியாளர் தேவைப்படும் பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான திறமைகளை/பணிகளை இந்த இணையதளத்தில் பதிப்பித்து உள்ளனர். இதில் உங்கள் தகுதிக்கு பொருந்தக்கூடிய பணியை தேர்ந்தெடுத்து அதற்குரிய சேவை கட்டணத்தைக் (விரும்பும் சம்பளம்) குறிப்பிட வேண்டும்.
உங்கள் திறமை மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை உங்களிடம் ஒப்படைக்கும்.