Wednesday, March 12, 2008

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மந்தமடைந்து வருகிறது.

இதனால் அந்த நாட்டை நம்பி இங்கு பிழைப்பு நடத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மந்த நிலை பிரதிபலிக்கலாம் என்று இந்த துறையை சேர்ந்த கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியா விட்டாலும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் 4ம் காலாண்டு வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் 10 முன்னணி அமெரிக்க வாடிக்கையாளர்களில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் புரோஜெக்டுகளை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தகவல் தொழில் நுட்ப செலவினங்களை தாமதப்படுத்துவதாக, டிசிஎஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 2008ம் ஆண்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு அவ்வளவு லாபம் தரும் ஆண்டாக இருக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் வங்கிகள் சப் பிரைம் என்ற அநாயச கடன் திருவிழாவை நடத்தி வருவதால் அதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல வங்கிகள் தங்களது தகவல் தொழில் நுட்ப பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.