ஐக்கிய அரபு எமிரேட்டின் முதலாவது மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அரேபியா இம்மாதம் 31ம் தேதி முதல் ஷார்ஜாவில் இருந்து புதுடெல்லிக்கு விமான சேவையைத் துவக்க உள்ளது.
இந்தியாவில் முதல் சேவையாக கடந்த ஆண்டில் கோழிக்கோடுக்கு தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கியதாகவும், இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது புதுடெல்லிக்கான சேவையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஏர் அரேபியா நிறுவன வர்த்தகப் பிரிவு தலைவர் ஏ.கே. நிஸார் தெரிவித்துள்ளார்.
துவக்கத்தில் புதுடெல்லிக்கும், ஷார்ஜாவிற்கும் இடையே வாரத்திற்கு 4 முறை விமான சேவை இயக்கப்படும் என்றும், வரும் மே மாதத்தில் இருந்து அன்றாட சேவையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை, ஜெய்ப்பூர், கொச்சி, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரத்திற்கு ஏர் அரேபியா நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது.